குருத்து ஞாயிறு நம்மிடம் தொடுக்கும் கேள்வி?
- படித்ததில் ஆசீர்வாதமானது
- Mar 25, 2018
- 2 min read

ஒரு தந்தையும் மகனும் பிழைப்பு தேடி காட்டு வழியே பயணம் செய்தனர். காட்டு வழியில் கற்களும் முட்களும் சிறுவனின் கால்களை பதம் பார்த்தன. கால்களில் ஏற்பட்ட வலி, அவனது வேகத்தை குறைத்தது. அதோடு பசியும், களைப்பும், சோர்வும் வாட்டின.
தந்தை அவனை சிறிது நேரம் அமர வைத்தார். மகனின் வலியை சகிக்க முடியாத தந்தை, அவனை சிறிதுநேரம் தோளில் தாங்கினார். அவருக்கும் களைப்பு தட்டவே, தன் மகனிடம் கூறினார், தம்பி நான் முதலில் நடக்கிறேன் பிறகு நீ என் பாதச்சுவடுகளை, தடங்களை பின்பற்றி அதிலேயே உன் கால்களையும் வைத்து நடந்த வா.அப்போது கற்களும், முட்களும் உன் கால்களைத் தீண்டாது என்று கூறி தந்தை முன் நடந்த கற்களின் கடுமையையும், முட்களின் கொடுமையையும் தாங்கிக்கொண்டு மகனை பத்திரமாக அழைத்துச் சென்றார்.
தன் சுகத்தை, மகிழ்ச்சியை, சந்தோசத்தை ஏன் தன்னையே மறந்து, தன் பிள்ளை கஷ்டப்படாமல் கரை சேர கொடுமைகளை தாங்கினார் தந்தை.
அதுபோலதான் (இயேசு)அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
அவரின் பாடுகளின் துவக்கம் தான் இந்த குருத்து ஞாயிறு. நமக்காக பாடுகள், வேதனைகள், துன்பங்கள் பட, ஏன் மரிக்க இயேசு தயாராகிறார் என்பதை நினைவுபடுத்துகிறது இந்த நாள்.
அவரின் பாடுகள் நம்மீது அவர்கொண்ட பாசத்தின் வெளிப்பாடு. அவரின் பாடுகள் அவர்மீது திணிக்கபட்டது அல்ல. அவராக விரும்பி ஏற்றுக்கொண்டது. நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோ 10:11) என்று சொல்லி மனமுவந்து பாடுகளை ஏற்று, மரணத்தைச் சந்தித்தவர் இயேசு.
தான் கொண்ட இலட்சியத்திற்காக, தான் வந்த நோக்கத்திற்காக, துன்பங்களைக் கண்டு பின்வாங்கவில்லை. ஓடி ஒளிந்து கொள்ளவில்லை எதிர்த்துப் பேசவில்லை, அழுது புலம்பித் தள்ளவில்லை அவர். ஆனால் அவைகளைச் சந்திக்க கழுதைமீது ஏறுகிறார்.
இலட்சியத்தை நிறைவேற்ற, நாம் மீட்படைந்து விண்ணகம் சேர. யாராவது பாடுகள் படுவதற்கு, துன்பப்படுவதற்கு, கொல்லப்படுவதற்கு ஆரவாரத்தோடு, மகிழ்ச்சியோடு பவனி செல்வார்களா? ஆனால் இயேசு சென்றாரே, அந்த துணிச்சல் நம்மிடம் இருக்கிறதா?
துன்பங்களைத் தாங்க இயேசு துணிச்சலுடன் பயணிக்கிறார். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; (யோ 16:33). என்று இயேசு சொல்கிறார்.
துன்பங்களைத் தாங்குபவன், சந்திப்பவன், எதிர்கொள்பவன் தான் என் சீடன் என்று இயேசு சொல்கிறார். ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் (மத் 16,24)
துன்ப துயரங்கள், பிரச்சனைகள் எத்தனை வந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து அவரை போல அவருடைய வழிகளில் துணிந்து நடக்க நீங்கள் தயாரா? இதுவே குருத்து ஞாயிறு நம்மிடம் தொடுக்கும் கேள்வி?
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்
நன்றி: இறையியல் மாணவர்கள்கோவை நல்லாயன் குருத்துவக் கல்லூரி
Commentaires