நித்திய வீடு பரலோகம் தான்..!!
- Jb Yeshua
- Oct 24, 2019
- 2 min read

"நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்". (பிலி. 3:20)
தேவனை உண்மையாய் பின்பற்றி, அவர் போதித்த சத்திய வசனங்களின்படி ஜீவிக்கிறவர்களுக்கு இந்த பூமி ஒரு நிலையானது அல்ல!!! ஏதோ ஐம்பது அல்லது அறுபது வயது வரை வாழ்கிறவர்களுக்கு எப்படியும் ஒருநாள் தன்னுடைய நித்திய வீட்டிற்கு சென்றே ஆக வேண்டும். அது பரலோகமா அல்லது நரகமா என்று இந்த பூமியிலே நாமே தீர்மானிக்கிறோம்.
தேவனுடைய பிள்ளைகளுக்குரிய நித்திய வீடு பரலோகம் தான். அங்கே தான் நமது தகப்பனுடைய வீடு உள்ளது. அந்த தகப்பன் எப்போது நம்மை அழைத்துச் செல்ல வருகிறாரோ அப்பொழுது அங்கே நாம் செல்ல வேண்டும். அதை தான் எப்பொழுதும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். முதலாவது இந்த பூமி நம்முடைய வீடு அல்ல என்று உணர வேண்டும்.
உதாரணமாக நாம் ஒரு ஊருக்குச் செல்கிறோம். போகும் வழியில் சில நாட்கள் தங்குகிறோம். அதன்பிறகு நாம் தீர்மானித்த ஊருக்குச் செல்கிறோம். அதைப்போலவே நம்முடைய நிலையான ஊர் பரலோகம். இடையில் சில நாட்கள் இந்த பூமியிலே வாழுகின்றறோம். அதனால் இந்த பூமி நமக்கு சொந்தமானது அல்ல! இடையில் சிறிது காலம் தங்குமிடம் அவ்வளவு தான். அதன்பிறகு நம்முடைய நித்திய முடிவில்லாத வீட்டிற்கு செல்ல போகிறோம் என்பதை மறக்க கூடாது. வேதம் கூறுகிறது தேவனுடைய பிள்ளைகள் இந்த பூமியில் "பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட"பரதேசிகளுக்கு" எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது". (1 பேதுரு 1:2)
ஆம், தேவனுடைய பிள்ளைகளே, இந்த பூமியில் தேவனுடைய பிள்ளைகள் பரதேசிகள் தான். நம்முடைய தகப்பன் வீடு இந்த பூமியிலே இல்லை. நம்முடைய வீடு இந்த பூமி அல்ல! நம்முடைய வீடு பரலோகம். அங்கேயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு இந்த பூமிக்கு கடந்து வந்து நம்மை மறுபடியும் அழைத்துச் செல்வார் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும். பரதேசிகளுக்கு தங்கள் நித்திய வீட்டைக் குறித்த ஏக்கம் தான் இருக்க வேண்டுமே தவிர பூமியைக் குறித்த வெறி இருக்க கூடாது.
நித்திய வீட்டிற்கு போக தகுதியற்றவர்கள் யாரென்றால் இந்த கைகளால் செய்யப்பட்ட வீடு தங்களுக்கு போதுமென்று, இந்த பூமியே தங்களுக்கு போதுமென்று வாழ்கிறவர்கள் யாரோ, அவர்கள் நித்திய வீட்டிற்கு போகும் தகுதியை இழந்துவிடுகிறார்கள். நித்திய வீட்டிற்கு போக்கூடியவர்கள் இந்த பூமியை முற்றிலும் வெறுத்தவர்களால் வாழ வேண்டும். அவர்களுடைய எதிர்பார்ப்பு என்னை அழைத்துச் செல்ல இயேசு கிறிஸ்து வருவார் என்று அனுதினமும் ஆயத்ததோடு காத்திருக்க வேண்டும்.
தேவனுடைய பிள்ளைகளுக்குரிய வீடு இந்த பூமியல்ல. இயேசு கிறிஸ்து இந்த பூமியிலே கடந்து வந்த போது, அவரை இந்த பூமி ஏற்றுக்கொள்ளாமல் கொலை செய்தது. அதைப்போல நமக்கு அதே வழி தான். இந்த பூமி தேவனுடைய பிள்ளைகளை ஏற்றுக்கொள்ளாது. இந்த பூமி தேவனுடைய பிள்ளைகளுக்கு கண்ணீர் மட்டுமே கொடுக்கும். போராட்டத்தையே கொடுக்கும், கஷ்டத்தையே கொடுக்கும். ஆனால் நாம் இதனை பொருட்படுத்தாமல் நமக்கு நித்திய வீடு பரலோகம் உள்ளது என்று எண்ணி அதை எப்போது அடைவோம் என்று ஜெபத்தோடு காத்திருக்க வேண்டும்.
நித்திய வீட்டிற்கு சென்ற பின்னர் தேவனுடைய பிள்ளைகளுக்கு, "இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை, வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார், தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர்யாவையும் துடைப்பார் என்றான்". (வெளி 7:16,17)
என்று எழுதப்பட்டிருக்கிறபடியால் இந்த நித்திய வீட்டிற்கு செல்ல, அதனுடைய தகுதி இந்த பூமியிலே நாம் படும் பாடுகள் தான். எது வந்தாலும், "கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ" (ரோமர் 8:36) என்று ஓடி நித்திய முடிவில்லாத வீட்டிற்கு வந்தடைய அன்பின் ஆண்டவர் இயேசு ஆவலோடு காத்திருக்கிறார்.
நன்றி: இன்றைய நாளுக்கான பரிசுத்த வேதாகம வசனம் மற்றும் தியானம் Facebook page
Comments