நம் ஆண்டவரின் விருப்பம்
- படித்ததில் ஆசீர்வாதமானது
- Apr 19, 2018
- 1 min read

“நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது....” – 1தெச. 4:3
ஒரு கழுகுக்குஞ்சு, கோழிக்குஞ்சுகளோடு வளர்க்கப்பட்டது. உயர, உயர வானத்தில் பறக்க வேண்டிய கழுகு கோழியைப்போல புழுக்களை, பூச்சிகளையே உண்டு வாழ்ந்துகொண்டிருந்தது. அதை வளர்த்தவர் பலமுறை அதை பறக்கச்செய்ய முயன்றார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கழுகு பறக்கவே இல்லை. ஒருநாள் அவர் தமது கையில் கழுகை வைத்துக்கொண்டு, சூரியனை அதின் கண்கள் பார்க்கும்படியாகச் செய்தார். சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய ஒரே பறவையான கழுகு தன்னைத்தான் உணர்ந்தது. உயர உயரப் பறந்து சென்றது.
இப்படித்தான் உன்னதத்திற்கு நேராய் உயர உயரச் செல்ல வேண்டிய நாம், இன்று உலகத்தோடு கலந்து, நோக்கமில்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் நம் ஆண்டவருக்கு நம்மைக் குறித்து ஒரு விருப்பம் உண்டு.
ஒரு ஆசிரியரின் விருப்பம் என்னிடம் கல்வி பயிலுகின்ற மாணவ மாணவியரை நாளைய தலைவர்களாக்க வேண்டுமென்பதே! ஆனால் நம்மைக் குறித்து நம் ஆண்டவரின் விருப்பம் என்னவெனில், நாம் ஒவ்வொருவரும் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டும் என்பதே. ஆனால் அவர் சித்தத்தை நிறைவேற்றவிடாதபடி சாத்தான் நம்மை இந்த உலகத்தின் பிடியில் சிக்கவைத்து, உலகத்தோடு ஒத்துவாழவைத்துக் கொண்டிருக்கிறான்.
“எவன் ஒருவன் ஆண்டவரே நான் பரிசுத்தமாக வாழ ஆசைப்படுகிறேன்” என்று உள்ளத்தின் ஆழத்திலிருந்து செய்த பாவத்திற்கு மன்னிப்பு வேண்டி, பரிசுத்த வாழ்விற்கு உதவி கேட்கிறானோ, அப்பொழுது இயேசு, தன் தூதரை அனுப்பி அல்ல, அவரே தன் சிங்காசனத்தை விட்டு இறங்கி வந்து உதவி செய்வார். ஆனால் சாத்தானோ நாம் உயர ஆண்டவரை நோக்கி பறந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாய் இருப்பான்.
வாலிபரே! நம் ஆண்டவரின் சித்தத்தை நிறைவேற்ற உயர உயரப் பறந்து நீதியின் சூரியனாம் இயேசுவை நோக்கிப்பார்த்து நம்மை நாமே உணர்வோம். ஆவியானவர் தாமே கூடவே இருந்து பரிசுத்தமாய் வாழ உங்களுக்கு ஒவ்வொரு நொடிப்பொழுதும் உதவி செய்வாராக ! ஆவிக்குரிய வாழ்வில் ஒவ்வொருநாளும் உயர உயரச் சென்று தேவனின் நாமத்திற்கு மகிமையுண்டாக வாழ்வோம்.
B.ஜெபமலர் - ராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
Comments