இயேசுவை நோக்கி பொறுமையோடே ஓடக்கடவோம்.
- படித்ததில் ஆசீர்வாதமானது
- Apr 26, 2018
- 1 min read

நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். (எபிரெயர் 12:1)
பல வருடங்களுக்கு முன் கிரீஸ் தேசத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி ஒன்றில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் முக்கிய இடம் பெற்றிருந்தது. பார்வையாளர்களின் பலத்த கரகோஷத்திற்கு இடையில் முதல் மூன்று இடத்தைப் பிடித்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு பதக்கங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஒலிபெருக்கியில் இன்னொரு அறிவிப்பும் வந்தது, “இன்னொரு வீரன் கடைசியாக ஓடிவந்து கொண்டிருக்கிறார்” என்பதே! எல்லோருக்கும் ஆச்சரியம். வீட்டுக்குப் போக ஆயத்தப்பட்டவர்களெல்லாம் நின்று விட்டார்கள். “இனி ஓடி என்ன பிரயோஜனம், நின்றுவிட வேண்டியதுதானே” என்பது பலரின் கருத்து. “சரி என்னதான் ஆகுமென்று பார்ப்போம்” என காத்திருந்தனர்.
அந்த கடைசி ஓட்டப்பந்தயவீரர் மைதானத்திற்குள் வந்துவிட்டார். பத்திரிக்கையாளர்களும் மீடியாக்களும் அவரை சூழ்ந்து கொண்டனர். பார்வையாளர்கள் கண் இமைக்காமல் அவரை பார்த்துக் கொண்டிருக்க, “எல்லாம் முடிந்துவிட்டது. உங்கள் ஓட்டத்தை நிறுத்தியிருக்கலாமே?” என ஒருவர் கேட்டார். அதற்கு அவர், “என் நாடும் என் மக்களும் என்னை நம்பி அனுப்பியதன் நோக்கம் இடையில் ஓட்டத்தை நிறுத்துவதற்காக அல்ல; என் இலக்கை அடையும்வரை ஓட்டத்தை ஓடி முடிப்பதற்காகவே! அவர்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் உடைக்க எனக்கு உரிமையில்லை. ஆகவே கடைசிவரை ஓடினேன்” என்றார். இதைக் கேட்டவுடன் முழு மைதானமுமே எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி ஆரவாரித்தனர்.
அன்பு சகோதரனே-சகோதரியே! வாழ்க்கையில் நீங்கள் கண்ட துன்ப துயரங்களால் கிறிஸ்தவ ஓட்டத்தை நடுவிலேயே நிறுத்திக் கொண்டீர்களோ? ஊழியத்திலே வந்த பொய் குற்றச்சாட்டினால் சோர்ந்து, போதும் இனி ஒன்றும் வேண்டாம் என்று தீர்மானித்துவிட்டீர்களோ? உங்களது ஓட்டத்தை துவக்கினவர் தேவனல்லவா, மனிதரல்லவே! நீங்கள் உண்மையுள்ளவன் என்று நம்பியல்லவா ஆண்டவர் உங்களைத் தெரிந்துகொண்டார். அவருக்காக இறுதிவரை நிலைத்து நிற்பீர்கள் என்று நம்பியல்லவா வரங்களையும் வல்லமைகளையும் கொடுத்து இத்தனை தூரம் நடத்திவந்தார். ஆண்டவர் உங்கள் மீது வைத்த நம்பிக்கையை உடைப்பது தகுமா?
பார்வையாளர்கள் நம்மை உற்சாகப்படுத்தலாம். அல்லது ஓட்டம் தடைபடும்படி செய்யலாம்; ஆனால் நம் ஆண்டவர் பார்வையாளரல்ல, நம்மோடு கூட ஓடுகிறவராய் இருக்கிறார். ஆகவே ஓட்டத்தை இலகுவாக்கவும் சவால்களை மேற்கொள்ளவும் அவர் பெலன் தருவார். முடிவிலே நாம் பவுலைப்போல கூறலாம். நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. கர்த்தர் அதை எனக்குத் தருவார். ஆம், கர்த்தருக்காக ஓடத் துவங்கின ஓட்டம் அவருக்காகவே முடியட்டும். எத்தனை நிந்தனைகள் வந்தாலும் நம்மை அழைத்தவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாய் நடந்து கொள்வோம்.
Comments